யயாதி

சிற்றின்பம் மற்றும் உணர்திறன்

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன.

தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின் மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள்.

அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான்.

நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார்.

இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையாளம் ” என ஒரு விமோசனம் கூறினார்.

விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்.

அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர்.

One Reply to “சிற்றின்பம் மற்றும் உணர்திறன்”

  1. மிக அருமை, ஆசையை துறப்பது கடினம் ஆனால் ஒரு சமயத்தில் அதன் மீது சலிப்பு ஏற்பட்டு அந்த ஆசை விலகிவிடும் என்பதை உணர்த்துகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் எனவும் இதை கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *